பெரும்புலர் காலை மூழ்கிப் பித்தர்க்குப் பத்தர் ஆகி
அரும்பொடு மலர்கள் கொண்டாங்கு ஆர்வத்தை உள்ளே வைத்து
விரும்பிநல் விளக்குத் தூபம் விதியினால் இடவல் லார்க்குக்
கரும்பினில் கட்டி போல்வார் கடவூர்வீரட்ட னாரே.
தீபம் (ஏகதீபம்) காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
சோதியே சுடரே சூழலொளி விளக்கே சுரிகுழல் பணைமுலைமடந்தைப்
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய் பங்கயத்தயனுமாலறியா
நீதியே செல்வத் திருப்பெருந் துறையுள் குருந்தம் மேவிய சீர்எம்
ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால் அதெந்துவே என்றருளாயே
கற்பூரப் பேரொளி காட்டும் போது பாட வேண்டிய மந்திரம்
கற்பனை கடந்த சோதி கருணையே உருவம் ஆகி
அற்புதக் கோலம் நீடி அருமறை சிரத்தின் மேலாம்
சிற்பர வியோம மாகும் திருச்சிற்றம்பலத்துள் நின்று
பொற்புடன் நடம்செய் கின்ற பூங்கழல் போற்றி போற்றி.