திரு விளக்கு அகவல்
விளக்கே திருவிளக்கே வேந்தன் உடன்பிறப்பே
ஜோதிமணி விளக்கே ஸ்ரீதேவி பொன்மணியே
அந்திவிளக்கே அலங்கார நாயகியே
காந்தி விளக்கே காமாக்ஷி தாயாரே,
பசும்பொன் விளக்கு வைத்துப்பஞ்சு திரி போட்டுக்
குளம்போல எண்ணெய் விட்டுக்
கோலமுடன் ஏற்றி வைத்தேன்!
ஏற்றினேன் நெய்விளக்கு எந்தன் குடி விளங்க
வைத்தேன் திரு விளக்கு மாளிகையும் தான் விளங்க
மாளிகையில் ஜோதி உள்ள மாதாவைக்
கண்டு மகிழ்ந்தேன் யான்!
மாங்கல்ய பிச்சை மடி பிச்சை தாருமம்மா!
சந்தான பிச்சையுடன் தனங்களும் தாருமம்மா!
பெட்டிநிறைய பூஷணங்கள் தாருமம்மா!
கொட்டகை நிறைய குதிரைகளை தாருமம்மா!
புகழுடம்பை தாருமம்மா! பக்கத்தில் நில்லுமம்மா!
அல்லும்பகலும் என்றன் அண்டையிலே நில்லுமம்மா!
சேவித்து எழுந்திருந்தேன், தேவி வடிவங்கண்டேன்
வஜ்ர கிரீடம் கண்டேன், வைடூர்ய
மேனி கண்டேன்
முத்துக்கொண்டை கண்டேன் முழுப்பச்சை மாலை
கண்டேன்
சௌரி முடி கண்டேன் தாழை மடல் சூடக்கண்டேன்
பின்னல் அழகு கண்டேன் பிறை போல் நெற்றி கண்டேன்
சாந்துடன் நெற்றி கண்டேன் தாயார் வடிவங்கண்டேன்
கமலத் திரு முகத்தில் கஸ்தூரிப் பொட்டு கண்டேன்
மார்பில் பதக்கம் மின்ன மாலையசையக்கண்டேன்
கைவளையல் கலகலென்னக் கணையாழி மின்னக் கண்டேன்
தங்க ஒட்டியாணம் தகதகென்ன ஜொலிக்கக் கண்டேன்
காலிற்சிலம்பு கண்டேன் காலாழி பீலி கண்டேன்
மங்கள நாயகியை மனங்குளிரக் கண்டு
மகிழ்ந்தேன் அடியேன் யான்!
அன்னையே அருந்துணையே அருகிருந்து காருமம்மா!
வந்த வினையகற்றி மஹா பாக்கியம் தாருமம்மா!
தாயாகும் உன்றன் தாளடியில் சரணம் என்றேன்
மாதாவே உன்றன் மலரடியில் நான் பணிந்தேன்!!!
விளக்கு ஏற்றி வைத்து இந்த அகவலை படித்து 16
முறை நமஸ்காரம் செய்ய வேண்டும்